கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது!

என்னமோ இருக்கு
இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.
 அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான போர் படை விமானங்களுக்கு பயிற்சி தரும் விமானம் ஒன்று 1945-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்து கொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் வருமாறு:
அந்த விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானியின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதே போல இன்னொரு நிகழ்ச்சியும்  உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டதாகவும். அந்தக் கப்பலை மீட்க கடற்படை விமானம் ஒன்று 13 மீட்பு பணி குழுவினருடன் சென்றதாகவும் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு எந்த அறிகுறியும் இன்றி மறைந்ததாகவும் கூறுகிறது.! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில்தான் நடந்தது.
மேலும் சுமார் 280 டன் எடையுள்ள “மேரி செலஸ்டி’ என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக  மேலைநாட்டுச் செய்தித் தாள்களில் குறிப்பிடப் பட்டிருந்தது. இதே போல் பெர்முடா முக்கோணப் பகுதியில் பார்படோஸ்  என்ற தீவிலிருந்து “யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்’ என்ற ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
இதே பெர்முடா முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் “டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.
 இன்னும் ஒரு வியப்பான சம்பவம்  இதே பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது.  ஒரு ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து, "கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது! உதவிக்கு வாருங்கள்”
devil triangle
எனஅபாய அறிவிப்பு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.
மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.
இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், “தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு’ என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே  இன்று வரை நீடிக்கிறது.
 இது போன்ற சம்பவங்களினால்தான் நம்மை மீறிய சக்தி உள்ளது என்பதை ஒரு திகிலுடன் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இது தமிழ் ரிஷி என்பவரின் கட்டுரையை தழுவியும் (நன்றி திரு.தமிழ் ரிஷி) 
பெர்முடா ட்ரையங்கிள் சம்பந்தமான புத்தகங்கள் வாயிலாகவும் சேகரிக்கப்பட்டது.

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...